பஞ்ச பாண்டவர்களில் ஒருவரான அர்ஜுனன் தனது தீர்த்த யாத்திரையின்போது இங்கு வந்தான். அப்போது அவனுக்கு தாகம் எடுக்க, சிவபெருமான் முதியவர் வேடத்தில் அங்கு தோன்றி அருகில் உள்ள தண்ணீர் காட்டினார். அர்ஜுனனும் தனது வாளை முதியவரிடம் கொடுத்துவிட்டு நீர் குடிக்கச் சென்றான். முதியவர் அந்த வாளினை அருகிலிருந்த புற்றில் ஒளித்து வைத்துவிட்டு மறைந்தார். முதியவரைக் காணாத அர்ஜுனன் சிவபெருமானிடம் முறையிட, சிவபெருமான் காட்சி அந்த வாளினைக் கொடுத்தார். அதனால் இத்தலம் 'வாள்ஒளிபுற்றூர்' என்று அழைக்கப்பட்டு, காலப்போக்கில் 'வாளொளிபுத்தூர்' என்று மருவியது.
மகாவிஷ்ணு மாணிக்கத்தினால் சிவபெருமானுக்கு பூஜை செய்த தலமாதலால் மூலவர் 'மாணிக்கவண்ணர்' என்று அழைக்கப்படுகிறார்.
மூலவர் 'மாணிக்கவண்ணர்' என்னும் திருநாமத்துடன், சற்று உயர்ந்த பாணத்துடன், லிங்க வடிவில் காட்சி அளிக்கின்றார். வடமொழியில் 'இரத்தினபுரீஸ்வரர்' என்று அழைக்கப்படுகிறார். அம்பிகை 'வண்டார்பூங்குழலி', 'பிரம குந்தளாம்பிகை' என்னும் திருநாமங்களுடன் தரிசனம் தருகின்றாள்.
இக்கோயிலில் துர்க்கை சன்னதி சிறப்பு வாய்ந்தது.
இத்தலத்து முருகப்பெருமானை அருணகிரிநாதர் தமது திருப்புகழில் பாடியுள்ளார்.
திருஞானசம்பந்தர் இரண்டு பதிகங்களும், சுந்தரர் ஒரு பதிகமும் பாடியுள்ளார்.
இக்கோயில் காலை 7.30 மணி முதல் மதியம் 12 மணி வரையிலும், மாலை 4 மணி முதல் இரவு 8.30 மணி வரையிலும் திறந்திருக்கும்.
|